0:00
0:00

அதிகாரம் 26

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.
2 ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.
3 உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள்.
4 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து,
5 தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
6 அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான்.
7 பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார்.
8 அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான்.
9 உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான்.
10 அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
11 உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையுமிருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
12 பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
13 இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
14 இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
15 கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
16 அவன் பலப்பட்டபோது, தனக்குக்கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம்மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.
17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,
18 ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டுவெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.
19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.
20 பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியேபோகத் தீவிரப்பட்டான்.
21 ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.
22 உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.
23 உசியா தன் பிதாக்களோடே நித்திரையடந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.