0:00
0:00

அதிகாரம் 25

அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
3 ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
4 ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
5 அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான்.
6 இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.
7 தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.
8 போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
9 அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.
10 அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.
11 அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான்.
12 யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள்.
13 தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.
14 அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.
15 அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.
16 தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதைவிட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.
17 பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம்வா என்று சொல்லியனுப்பினான்.
18 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.
19 நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.
20 ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.
21 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.
22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
23 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்மேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக்கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு,
24 தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப்பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.
25 யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.
26 அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
27 அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
28 குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.