யாத்திராகமம்
அதிகாரம் 35
மோசே இஸ்ரவேல், புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி:
2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
3 ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான்.
4 பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:
5 உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்.
6 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும்,
7 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும்,
8 விளக்குக்கு எண்ணெயும், அபிஷேக தைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
9 ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
10 உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
11 வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும்,
13 மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும்,
14 வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும்,
15 தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
16 தகன பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
17 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,
18 வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,
19 பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான்.
20 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.
21 பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும் அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.
22 மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.
23 இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
25 ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
26 எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.
27 பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும்,
28 பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
29 செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக் கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.
30 பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
31 அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும்,
32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும்,
33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார்.
34 அவன் இருதயத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.