யாத்திராகமம்
அதிகாரம் 22
ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன்.
2 திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது.
3 சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன்.
4 அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
5 ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
6 அக்கினி எழும்பி, முள்ளுக்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
7 ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும்.
8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோக வேண்டும்.
9 காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன்.
10 ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
12 அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம் பண்ணக்கடவன்.
13 அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை.
14 ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன்கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்.
15 அதற்கு உடையவன்கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம்.
16 நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
17 அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18 சூனியக்காரியை உயிரோடே வைக்க வேண்டாம்.
19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20 கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன்.
21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே.
22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
23 அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு,
24 கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள்.
25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.
26 பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.
27 அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்.
28 நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.
29 முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்க வேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக.
30 உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும், எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
31 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.