எசேக்கியேல்
அதிகாரம் 35
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2 மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
3 அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.
4 உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
5 நீ பழைய பகையை வைத்து இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
6 நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் உன்னைப் பின்தொடரும்.
7 நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து,
8 அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.
9 நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
10 இரண்டு ஜாதிகளும் இரண்டுதேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால்,
11 நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
12 இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையைாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய்.
13 நீங்கள் உங்கள் வாயினால் எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன்.
14 பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
15 இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.