1 இராஜாக்கள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22


அதிகாரம் 15

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,
2 மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
3 தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.
4 ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
6 ரெகொபொயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
7 அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
8 அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,
10 நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
12 அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
13 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராத படிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
14 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.
15 தன் தகப்பனும் தானும் பரிசுத்தப் படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
16 ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
17 ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
18 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
19 எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.
20 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங் கூடமுறிய அடித்தான்.
21 பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை விட்டு திர்சாவிலிருந்துவிட்டான்.
22 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின்கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
23 ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.
24 ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.
25 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.
26 அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
27 இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
28 பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
29 அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
30 அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
31 நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
32 ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
33 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,
34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.