குணப்படுத்து

0:00
0:00

  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
    யாத்திராகமம் 15:26
  • நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
    2 இராஜாக்கள் 20:5
  • நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
    சங்கீதம் 34:19
  • அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
    சங்கீதம் 103:3-4
  • அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
    சங்கீதம் 107:20
  • சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
    ஏசாயா 40:29
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
    ஏசாயா 53:5
  • அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    எரேமியா 30:17
  • ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
    மல்கியா 4:2
  • அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
    மத்தேயு 10:1
  • விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
    மாற்கு 16:17-18
  • அவர்களை அவர் பார்த்து: நீங்கள்போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
    லுூக்கா 17:14
  • பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
    அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:34
  • அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
    2 கொரிந்தியர் 12:7-9
  • முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்.
    எபிரெயர் 12:13
  • உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
    யாக்கோபு 5:14-16